திண்டுக்கல்லில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி அன்றாட பணியில் ஈடுப்பட்ட பொது மக்கள்!!!

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் அரசு கொண்டு வந்துள்ள கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து தங்களது அன்றாடப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தற்பொழுது கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. இதனைதொடர்ந்து தமிழக அரசு  பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய  ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளது. இதன்படி உணவகங்கள், ஷாப்பிங் மால்கள், தேநீர் கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் 50% பொது மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். திருவிழா பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. மேலும் பேருந்துகளில் நின்றவாறு பயணம் செய்யக்கூடாது. பேருந்தில் பயணம் செல்லும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் அரசு விதித்துள்ள தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நிறுவனங்களின் மீது அபராதம் விதித்து வருகிறது. திண்டுக்கல் நகரை பொருத்தவரை பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளனர். இதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேருந்து முன்பக்க கண்ணாடியில் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பேருந்தில் உள்ளே அமர அனுமதிக்கப்படும் என வாசகங்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ளது. 

திண்டுக்கல்லில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே  உணவருந்த அனுமதிக்கப்படுகின்றனர். அதே போல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிற்கு 12317 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 11736 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர் . மாவட்டம் முழுவதும் இதுவரை 201 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் மாவட்டம் முழுவதும்  379 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்ற நபர்களில் 41 நபர்கள்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டது.  அதேபோல் திண்டுக்கல் அரசினர் மகளிர் கல்லூரியில் ஏற்கனவே  அமைக்கப்பட்டிருந்த கொரோனா வார்டு  நோயாளிகளின் எண்ணிக்கை  குறைவடைந்து நிலையில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் நாள்தோறும்  வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 50 முதல் 60 வரை இருப்பதின் காரணமாக மீண்டும் அரசினர் மகளிர் கல்லூரியில் வார்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.  வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினருடன் இணைந்து காவல்துறையினர் விதிமுறைகளைப் பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், முக கவசம் அணியாமல் சுற்றித் திரிந்தவர்களிடம் வசூலித்தது என சுமார் ரூ.30,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருசில பொதுமக்கள் வைரஸ் தொற்றின் தீவிரத்தை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் முகக் கவசம் அணியாமல் சுற்றித்திரிந்து வருவதை காணமுடிகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1