புதுக்கோட்டையில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை வைத்திருந்த இளைஞர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் மேலும் இதில் தொடர்புடைய இரண்டு இளைஞர்களை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும் இதனை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தி போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்டம் முழுவதும் தனிப்படை அமைத்து 38 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்யும் நபர்களையும் அதனைப் பயன்படுத்து பவர்களையும் கைது செய்ய எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மச்சுவாடி அருகே உள்ள வண்டிப்பேட்டை பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி வைத்திருந்ததாக ரஞ்சித்குமார்(23) என்ற இளைஞரை கைது செய்து அவரிடம் இருந்த 15 போதை மாத்திரைகள், ஊசிகள் மற்றும் அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து ரஞ்சித்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக காந்தி நகரைச் சேர்ந்த இசை வேந்தன், அய்யனார் புரத்தை சேர்ந்த மோகன் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
மேலும் இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகர் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்று வேறு யாரேனும் போதை மாத்திரைகள் பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்தும் சட்டவிரோதமாக மாத்திரைகள் விற்பனை செய்யும் நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.