நேபாளத்தில் ஆட்சிக் காலம் முடியும் வரை பிரதமர் மாறலாம்; ஆனால் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது: அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!!

நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனவும், 13 நாட்களுக்குள் எம்.பி.க்களுக்கு மீண்டும் பதவி வழங்கி நேபாள நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதமர்  கேபி சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர்  பிரசண்டாவிற்கும் இடையே அதிகார மோதல் நிலவி வந்தது. இதற்கிடையே, கடந்த வருடம் 2020 டிசம்பர் 20-ம் தேதி காலை பிரதமர் சர்மா ஒலி அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் நேபாள  நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.

ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. பிரதமர் சர்மா ஒலி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் தங்கள் முடிவை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து  உத்தரவிட்டார். தொடர்ந்து இடைக்கால பொதுத்தேர்தல் தேதியையும் அவர் அறிவித்தார். இதன்படி 2021 ஏப்ரல், மே மாதத்தில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராகப் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே,  நேபாள அரசியலமைப்புச் சட்டப்படி,  பிரதமருக்குப் பெரும்பான்மை இருந்தால், நாடாளுமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரை செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்றும், ஆட்சிக் காலம் முடியும் வரை பிரதமர்கள் மாறலாம். ஆனால், ஆட்சியைக் கலைக்க முடியாது என்றும் சட்ட  வல்லுநர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 13 நாட்களுக்குள் எம்.பி.க்களுக்கு மீண்டும் பதவி வழங்கி நேபாள நாடாளுமன்றத்தை கூட்டவும் உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

86 − = 77