தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.6941 கோடிக்கு கொள்கை அளவில் ஒப்புதல்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

2021-2022 க்கான இடைக்கால பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை துணைமுதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாட்கள் நடந்த கூட்டத்தொடரை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது. மேலும் தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது எனவும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டமும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெற்றது. அப்போது துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 10வது முறையாகும்.

தமிழக காவல்துறையை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடும்,
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ.3,016 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது

மேலும் திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது; திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது

மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1374 கோடி ஒதுக்கீடும், காவிரி- தெற்கு வெள்ளாறு நதிகள் இணைப்பிற்காக ரூ.6,941 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

கல்லணை கால்வாய் புனரமைப்பு, நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடம் கற்பிக்கப்படும்.

ஆவின் வரலாற்றிலேயே முதன்முறையாக 2020 ஜூலை 19-ம் தேதி 40.63 லட்சம் லிட்டர் கொள்முதல்; ஆவின் மற்றும் மாவட்ட ஒன்றியங்களால் தினசரி 24.49 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் ரூ.5,171 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது
மேலும் சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ.6,448 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

பழங்குடியினர் துணை திட்டத்திற்கு ரூ.1,276.24 கோடி ஒதுக்கீடும், ஆதி திராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டத்திற்காக ரூ.13,987.58 கோடி ஒதுக்கீடும், சென்னையில் போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.18,750 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.6941 கோடிக்கு கொள்கை அளவில் ஒப்புதல். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவர் இயற்கையாக உயிரிழந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை.

 மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடும், விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,738.81 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

23 − 21 =