சாமனிய மனிதனை இணைக்கும் சக்தி வாய்ந்த ஊடகம் சமுதாய வானொலி புதுக்கோட்டையில் துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுகை பண்பலை 91.2 ஆர்ண அலைவரிசையில் சமுதாய வானொலியை இன்று மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி துவக்கிவைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கூடல் நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழகம் கடந்த 23 வருடங்களாக பொதுமக்களிடையேயும், மாணவர்களிடையேயும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சொற்பொழிவு, கருத்தரங்குகள், பயிற்சிகள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

மேலும் பொது சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், மருத்துவ தாவரங்கள் பாதுகாப்பு போன்றவற்றில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டையை மையமாக வைத்து அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் நகர்புற வாசிகள் பயன்பெறும் நோக்கில் புதுகை பண்பலை 91.2ஆர்ண அலைவரிசையில் சமுதாய வானொலி துவங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிலைய இயக்குனர் விஜிக்குமார் தெரிவித்துள்ள செய்திகுறிப்பில் கூறியது “இந்த சமுதாய வானொலி மூலம் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் தகவல்கள் வழங்க உள்ளது.

மேலும் வானொலின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் பொது மக்களின் குரலை அடிப்படையாக கொண்டே வழங்கப்படவுள்ளது. சிறந்த குடிமக்களாக நாட்டின் முன்னேற்றத்திற்காக அதிகாரமிக்கவர்களாக நம் மாவட்ட மக்களை உயர்த்திட செய்யும் வகையில் இந்த புதுகை எப்.எம் ரோடியோ செயல்படும்.

கல்வி, சுற்றுச்சூழல், பாரம்பரியம், கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், விளையாட்டு என அனைத்து துறைகள் சார்ந்த சிறப்பு வாய்ந்த தகவல்களை இந்த பண்பலை எந்த ஒரு பாகுபாடும் இன்றி அனைவரும் பயன்படும் வகையில் உதவும்.

எதிர்காலத்தில் அரசுத்துறை, கல்லூரிகள், பள்ளிகளுடன் இணைந்து கிராமங்களில் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சிகள், நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சாமானிய மனிதனை இணைக்கும் சக்தி வாய்ந்த ஊடகமாக வானொலி திகழ்கிறது.

நமது நாட்டில் உள்ள சமுதாய வானொலி நிலையங்கள் பேரிடர் காலங்களில் மிகவும் முக்கிய பணியாற்றியுள்ளது. இந்த வானொலி நிலையங்கள் அந்தந்த பகுதியின் புவி அமைப்பை பொறுத்து செயல்படுகின்றன. இவை உள்ளுர் மற்றும் பேச்சு வழக்கு மொழிகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்புகின்றது.

சமுதாயத்தின் பண்பாடு கலாச்சாரம் ஆகியவை மக்கள் குரல் மூலம் ஒலிக்கிறது. வானிலை முன்னெச்சரிக்கை வேளாண் தகவல்கள் கொரானா தடுப்பு நடவடிக்கை போன்றவை இந்த சமுதாய வானொலி மூலம் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய பொது விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சமுதாய வானொலி நிலையங்கள் அரசுடன் இணைந்து பணி ஆற்றுகின்றன. இந்திய அரசின் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் ஆகியவை புதுகை எப்.எம் ரேடியோ செயல்பாட்டிற்க்கான அனுமதியை வழங்கியுள்ளது”.

புதுகை பண்பலை சமுதாய வானொலி நிலையத்தினை இன்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி திறந்து வைத்து சிறப்பித்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி, மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி முனைவர் ஆர்.ராஜ்குமார், மாமன்னர் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் அழகுமணியன், ஓய்வு பெற்ற பேராசிரியர் விஸ்வநாதன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து ரேடியோவில் உரையாற்றினா்.

மாவட்ட சிறுதொழில் அதிபர் சங்க செயலாளர் முரளிதரன், நேரு யுவகேந்திரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோயல் பிரபாகர்,  புதுகை வரலாறு நாளிதழ் ஆசிரியர் சிவசக்திவேல், ரோலண்ட் பவுண்டேசன் இயக்குனர் கோமதிசங்கர், எழுத்தாளர் சுவாமிநாதன், மாலையீடு சண்முகா நகர் நலசங்க உறுப்பினர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக நிலைய இயக்குனர் எஸ்.விஜிக்குமார் வரவேற்றார். நிர்வாக அலுவலர் சி.கார்த்திகேயன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழகம் செய்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 4