காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தில் கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற வருகைதந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:- இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக இடைக்கால பட்ஜெட் எஞ்சிய நாட்களில் வரவு செலவுக்காக இருக்க வேண்டும், அதைத் தாண்டி புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் அது தேர்தலில் வாக்கு பெறுவதற்காக தான் என்று பார்க்கப்படும்.
மேலும் மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை மிக்க புதுச்சேரி அரசை உட்கட்சி பிரச்சனையை பயன்படுத்தி எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் என்ற நாடகம் நடத்தி பாஜக அரசு புதுச்சேரி அரசின் ஆட்சியை கவிழ்த்திருப்பது ஜனநாயக படுகொலை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மோடியின் யோசனையோடு தான் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாக அனைவருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. புதுச்சேரியில் ஜெகத்ரட்சகன் அவர்களது கட்சியை வளர்ப்பதற்காக பேசியதை புதுச்சேரி அரசு கவிழ்வதற்கு காரணம் என குற்றம் சாட்ட முடியாது.
மேலும் காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தில் கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது. இந்தத் திட்டம் உபரி நீரை வெளியேற்றும் திட்டம் தான், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக எம்பிகள் குரல் கொடுப்போம். நான்காண்டு காலமாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடரும் போது இந்த திட்டத்தை நிறைவேற்றாமல், ஒரு மாதத்தில் ஆட்சி முடியும் தருவாயில் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளது தேர்தலில் வாக்கு பெறுவதற்காக தான். இந்த திட்டத்தை அடிக்கல் நாட்டியது போல் முறையாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.