புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை திறக்க உள்ள புதுகை பண்பலை 91.2 சமுதாய வானொலியை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி துவங்கி வைக்கிறார்.
புதுக்கோட்டை கூடல் நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழகம் கடந்த 23 வருடங்களாக பொதுமக்களிடையேயும், மாணவர்களிடையேயும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சொற்பொழிவு, கருத்தரங்குகள், பயிற்சிகள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தி வருகிறது.
மேலும் பொது சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், மருத்துவ தாவரங்கள் பாதுகாப்பு போன்றவற்றில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டையை மையமாக வைத்து அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் நகர்புற வாசிகள் பயன்பெறும் நோக்கில் புதுகை பண்பலை 91.2 அலைவரிசையில் சமுதாய வானொலியை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நாளை துவங்கி வைக்கிறார்.
இது குறித்து நிலைய இயக்குனர் விஜிக்குமார் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியது, “இந்த சமுதாய வானொலி மூலம் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் தகவல்கள் வழங்க உள்ளது.
மேலும் வானொலின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் சாமானிய மக்களின் குரலை அடிப்படையாக கொண்டே வழங்கப்படவுள்ளது. சிறந்த குடிமக்களாக நாட்டின் முன்னேற்றத்திற்காக அதிகாரமிக்கவர்களாக நம் மாவட்ட மக்களை உயர்த்திட செய்யும் வகையில் இந்த புதுகை எப்.எம் ரோடியோ செயல்படும்.
கல்வி, சுற்றுச்சூழல், பாரம்பரியம், கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், விளையாட்டு என அனைத்து துறைகள் சார்ந்த சிறப்பு வாய்ந்த தகவல்களை இந்த பண்பலை எந்த ஒரு பாகுபாடும் இன்றி அனைவரும் பயன்படும் வகையில் உதவும்.
ஏதிர்காலத்தில் அரசுத்துறை, கல்லூரிகள், பள்ளிகளுடன் இணைந்து கிராமங்களில் வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சிகள், நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகமும் இந்த எப்.எம் ரேடியோ செயல்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது”.
புதுகை பண்பலை சமுதாய வானொலி நிலையத்தினை 23.02.2021 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமா மகேஸ்வரி திறந்து வைத்து ரேடியோவில் உரையாற்ற உள்ளார். சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சுவாமிநாதன், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி, மாமன்னர் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் அழகுமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். முன்னதாக நிலைய இயக்குனர் எஸ்.விஜிக்குமார் வரவேற்கிறார். நிர்வாக அலுவலர் சி.கார்த்திகேயன் நன்றி கூறுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சி கழகம் செய்து வருகிறது.