தமிழகத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கோயில் கட்டுவதற்கான பணிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
உளுந்தூர்பேட்டையில் இன்று திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
முன்னதாக விழாவில் கலந்து கொள்ள வந்த முதல்வர் பழனிசாமிக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அளவீடு பணிகள் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் சேலம் – திருச்சி ரோடு சந்திப்பு புறவழிச்சாலை பகுதியில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
முன்னதாக நேற்று மாலை 50க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் யாக சாலை பூஜைகள் துவங்கின. இன்று காலை இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து கோபூஜை வழிபாடு செய்யப்பட்டு பெருமாள் கோயில் அமைய உள்ள இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அறங்காவல் குழு தலைவர் சுப்பா ரெட்டி, அறங்காவல் குழு உறுப்பினர் குமரகுரு எம்எல்ஏ ஆகியோர் அடிக்கல் நாட்டி கோயில் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து கோயில் விழா கல்வெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கோயில் வந்த வரலாறு:
கடந்த 2019ம் ஆண்டு உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு , உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏழுமலையான் கோயில் கட்ட 4 ஏக்கர் நிலத்தினை வழங்கினார். இதற்கான ஆவணத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேவஸ்தான அதிகாரிகளிடம் முதல்வர் பழனிசாமி ஒப்படைத்தார். அத்துடன் கள்ளக்குறிச்சியில் ஏழுமலையான் கோயில் கட்ட தேவையான நிர்வாக அனுமதியை வழங்குமாறு தமிழக முதல்வர் பழனிசாமி ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதினார்.
அதில், கோயிலை நிர்மாணிப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் தமிழக அரசு ஏற்கும் என்றும் எனவே கோயிலை கட்ட உடனடியாக அனுமதி அளிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு பெயரில் இருந்த 4 ஏக்கர் நிலம் திருப்பதி தேவஸ்தான பெயரில் பதிவு செய்து தரப்பட்டது. இக்கோயிலை கட்ட தனியார் மற்றும் பொதுமக்களிடமிருந்து ரூ.10 கோடி நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக ரூ. 3.16 கோடி வழங்கப்பட்டது.