சரோஜாதேவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கி அவர்களை கவுரவித்தார்.
தமிழக அரசு சார்பில் 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சங்கீதா கிரிஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, இசை அமைப்பாளர்கள் டி.இமான், தினா, பாடகர்கள் சுஜாதா, அனந்து, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஐசரி கணேஷ், இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், லியாகத் அலிகான், மனோஜ் குமார், ரவிமரியா, டி.வி நடிகர் நந்தகுமார் போன்றவர்களுக்கும்,
நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ், நித்யா, ஸ்டண்ட் இயக்குனர்கள் ஜாகுவார் தங்கம், தளபதி தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கலைஞர் கோமகன், பாடலாசிரியர்கள் காமகோடியன், காதல்மதி, வசனகர்த்தா வி.பிரபாகர், ஒளிப்பதிவாளர் ஆர்.ரகுநாத ரெட்டி, கதாசிரியர் தாமரை செந்தூர்பாண்டி ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, பின்னணி பாடகிகள் பி.சுசீலா, ஜமுனா ராணி ஆகியோருக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. சுகி சிவம், பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டது.
வறுமையில் வாடும் மூத்த கலைமாமணி விருதாளர்கள் பிரிவில் நடிகை பசி சத்யா, நாடக நடிகை எஸ்.என்.பார்வதி உள்பட சிலருக்கு பொற்கிழி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கலைமாமணி விருது மற்றும் பொற்கிழி வழங்கும் விழா சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2019 மற்றும் 2020 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.