அரியலூரில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.அரியலூர் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு, அதன் தலைவர் எஸ். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் அ.நல்லப்பன் வரவேற்று பேசினார்.
தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற கல்லூரி முதல்வர் சிற்றரசுக்கு, கேடயம் வழங்கி, சால்வை அணிவித்து, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு செயலாளர் பேராசிரியர் க.ராமசாமி வாழ்த்தி பேசினார்.
திருமழபாடியை சேர்ந்த புலவர் திருநாவுக்கரசு, திருமானூரை சேர்ந்த நுகர்வோர் கவுன்சில் தலைவர் சமுத்திரம் ஆகியோர் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், தமிழ் பண்பாட்டு பேரமைப்பின், அமைப்பு செயலாளராக அ.நல்லப்பன், பொருளாளராக கொ.வி. புகழேந்தி, துணைச் செயலாளராக செல்லபாண்டியன் ஆகியோரை நியமனம் செய்து, அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில், 6-வது புத்தகத் திருவிழாவை, அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில், வழக்கம்போல வருகிற ஜூலை மாதம் நடத்துவது என முடிவுச் செய்யப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான சங்கத்தின் தணிக்கை அறிக்கையை, செயற்குழு ஏற்றுக்கொள்வது. அனைத்து நிலைகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டுமென மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் பண்பாட்டு பேரமைப்பை சேர்ந்த ஜெயங்கொண்டம் பன்னீர்செல்வம், அண்ணாமலை, ராவணன் ஆசிரியர், சிவக்கொழுந்து, மங்கையர்கரசி, பிச்சை பிள்ளை, சௌந்தர்ராஜன், தமிழ் களம், இளவரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற, இக்கூட்டத்தின் முடிவில் பொருளாளர் கொ.வி. புகழேந்தி நன்றி கூறினார்.