சசிகலாவை சந்திப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் கொடி நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று கொடியை ஏற்றி வைத்தார். அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த், அனைவருக்கும் கொடி நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் திறந்த வாகனத்தில் வந்து அனைவரையும் சந்தித்து பேசியது, அவரது தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயாகாந்த், சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தேர்தல் கூட்டணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இதுவரை எந்த கட்சியும் கூட்டணி குறித்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் தேமுதிக தனித்துப் போட்டியிட்டாலும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், அவரை சென்று சந்திப்பீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சசிகலாவை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் பதிலளித்துள்ளார்.