சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

இன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சமூக ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்திய சட்டங்களை சமூக ஊடகங்கள் பின்பற்ற வேண்டும். சமூக ஊடகங்கள் அரசுக்கு எதிராக பொய்யான கருத்துக்களை பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

 டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக அரசுக்கெதிராக அவதூறான கருத்துகளை பதிவிட்டவர்களின் கணக்குகளை முடக்க வேண்டுமென ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசின் உத்தரவுக்கு ட்விட்டர் நிறுவனம் முழுவதுமாக இணங்கவில்லை  எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத் பதிலளிக்கையில், ’’சமூக ஊடகங்களை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

 இந்திய பயனர்களால் நீங்கள் (சமூக ஊடகங்கள்) வருவாய் ஈட்டுகிறீர்கள். ஆதலால்,  நீங்கள் இந்திய அரசியலமைப்பை பின்பற்ற வேண்டும்.

சமூக வலைதளங்களின் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் சமூக ஊடகங்களை மிகவும் மதிக்கிறோம், அது பொது மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது. இருப்பினும்,  போலி செய்திகளை பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவில் கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் 19 ஏ பிரிவின்படி  நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று கூறுகிறது. இந்திய அரசியலமைப்பு அரசாங்கத்தையும் பிரதமரையும் கூட விமர்சிக்க அனுமதிக்கிறது. ஆனால் போலிச் செய்திகளை பரப்புவதற்கு அனுமதி கிடையாது’’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 8 =