தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் இது குறித்து அவர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் கொரோனா தாக்கம் மற்றும் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் சுகாதாரத்துறை வகுத்துள்ள தற்காப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாததால்தான் வெளிநாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் பலர் மெத்தனமாக இருந்து வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 450 என இருந்தது. இது தற்போது 7 ஆக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி நாளை முதல் பயன்படுத்தப்படும். அன்று தேசிய அளவில் 3 ஆயிரம் பேர்களுக்கும், தமிழகத்தில் 166 மையங்களில் போடப்படும். முதல் கட்டத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் தன் விருப்பத்தின் பேரில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.
தமிழகத்தில் தற்போது வரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். சமூகத்தில் முதல் நிலை பணியில் உள்ளவர்களுக்கும், காவல் துறையில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி என்பது நோய் வராமல் தடுக்க மட்டுமே. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.தடுப்பூசிகள் 2 முறை 28 நாட்கள் இடைவெளியில் இலவசமாக போடப்படும். ஒரே நிறுவனத்தின் தடுப்பூசியையே இரண்டு முறையும் செலுத்த வேண்டும். வேறு நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்தக்கூடாது. இந்த கால இடைவெளியில் மது அருந்தினால் பாதிப்பு ஏற்படுமா என அறிவியல் ரீதியான விளக்கம் எதுவும் இல்லை. மது அருந்துவது எந்த காலத்திலும் உடலுக்கு கேடு விளைவிக்கும். சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் நிரப்ப மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி இல்லாமல் 3 மணி நேரம் அமர்ந்திருப்பது தற்போதுள்ள சூழ்நிலையில் அபாயகரமானது என உணர்ந்து தான் அரசு அறிவித்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் இதுவரை இல்லை. சமைத்த முட்டை மற்றும் இறைச்சிகள் மூலம் பறவைக்காய்ச்சல் நிச்சயமாக பரவாது. இவ்வாறு அவர் கூறினார்.