உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்ந்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்: மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணியினர் இருபது பேர் பங்கேற்கும் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற பரப்புரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அந்த பிரச்சார பயணத்தின் போது முதற்கட்டமாக 20.11.2020 அன்று தொடங்கிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட நிர்வாகிகளை தொடர்ந்து நடத்த விடாமல் தடுப்பதற்கும், கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து கைது செய்து, நீண்ட நேரம், இரவு வரை காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கும் அதிமுக அரசின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மூர்த்தி எம்எல்ஏ, திமுக ஒன்றிய செயலாளர்கள் சிறைச் செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜிபி ராஜா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மருது பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் நேரு பாண்டியன், திருப்பாலை பகுதி கட்சி செயலாளர் சசிகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா, ஈஸ்வரி, பங்களா மூர்த்தி, குருவித்துறை பசும்பொன் மாறன், சாரதா தேவி ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் பயணம் என்ற தலைப்பில் பயணம் மேற்கொண்டு வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்தும், ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் அதிமுக அரசிற்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ, திமுகவின் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் விடியலை நோக்கி பயணத்திற்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை தொடர்ந்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.