சட்டப்பேரவை தேர்தல்: அதிமுகவிடம் 40 தொகுதிகள் கேட்கும் பாஜக

அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் இருந்து 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, பல்வேறு நலத்திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இனிவரும் தேர்தல்களில் தமிழகத்தில் அதிமுக -பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து விழா நிறைவு பெற்ற பின்னர் அமித்ஷா, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு கிளம்பிச் சென்றார். அங்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமித்ஷாவிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதற்கு பிறகு இரவு 8 மணிக்கு மேல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி, மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு, கவுதமி, நமீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் வரை ஒதுக்குமாறு அதிமுகவிடம் பாஜக கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 40 தொகுதிகள் வரை பாஜக தரப்பில் கேட்கப்பட்ட நிலையில் 25 இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக அதிமுக தலைமை உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

41 − 31 =