வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை, நீக்க 68,000 வாக்குச்சாவடிகளில் இன்று சிறப்பு முகாம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்ய தமிழகத்தில் சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் இன்று முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில், கடந்த 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,01,12,370 பேர், பெண்கள் 3,09,25,603 பேர், மூன்றாம் பாலினத்தவர் 6,385 பேர். 1.1.2021ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் வரும் டிசம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்கலாம். வேலைக்கு செல்பவர்கள் வசதிக்காக, 21ம் தேதி (இன்று), 22ம் தேதி மற்றும் டிசம்பர் 12, 13ம் தேதி ஆகிய 4 நாட்கள் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், இதில் பொதுமக்கள் வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சிறப்பு முகாமில் அந்தந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம், ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். 2வது கட்ட சிறப்பு முகாம் நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. 3ம் கட்ட சிறப்பு முகாம் டிசம்பர் 12ம் தேதியும், 4வது கட்ட சிறப்பு முகாம் டிசம்பர் 13ம் தேதியும் நடைபெறும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 902 வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 4