யானைகள் ஆர்வலர் அஜய் தேசாய் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

யானைகள் ஆர்வலர் அஜய் தேசாய் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெலகாம் பகுதியை சேர்ந்த இந்தியாவின் முக்கிய யானை ஆராய்ச்சியாளரான அஜய் தேசாய் (62) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். தனது 24 வயதிலேயே யானைகள் குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கிய அஜய் தேசாய், மும்பை இயற்கை வரலாற்று கழகத்தின் மூலம் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். கோவையில் யானைகளின் தொடர் மரணங்கள் தொடர்பாக தமிழக அரசு அமைத்த விசாரணைக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். இதை தவிர, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியில், யானைகள் ஆர்வலர் அஜய் தேசாய் மறைவெய்திய செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். மிகச் சிறந்த வன உயிரியல் பாதுகாப்பு நிபுணரை இந்தியா இழந்திருக்கிறது. அஜய் தேசாயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சூழலியல் ஆர்வலர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 6 =