புதுக்கோட்டையில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் வாக்குச்சாவடி மையம் : கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் வாக்குச்சாவடி மையத்தினை கலெக்டர் பி.உமாமகேஸ்வரி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 2021ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16.11.2020 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், சுருக்க திருத்தப்பணி 16.11.2020 முதல் துவங்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை 16.11.2020 முதல் 15.12.2020 வரை வாக்குசாவடி மைய அலுவலர்களிடம் அலுவலக நாட்களில் வேலை நேரம் முடிந்த பின்பு ஒரு மணிநேரமும் 21.11.2020 (சனிக்கிழமை), 22.11.2020 (ஞாயிற்றுகிழமை), 12.12.2020 (சனிக்கிழமை) மற்றும் 13.12.2020 (ஞாயிற்றுகிழமை) ஆகிய நான்கு நாட்கள் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களின் போது காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அளிக்கலாம். அந்தவகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,547 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6ஐ பூர்த்தி செய்து தங்களது ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, வயது மற்றும் இருப்பிடம் தொடர்பான ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம். மேலும் பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-லிலும், வாக்காளர் பட்டியலில்; பெயர் மற்றும் விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-லிலும், ஓரே தொகுதியில் இடம் மாறியுள்ள வாக்காளர்கள் படிவம் 8லிலும் உரிய ஆவணத்துடன் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அலுவலகங்களிலும், மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பிக்க வரும்பொழுது கோவிட்-19 பாதுகாப்பு குறித்து, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை தவறாது கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 1 =