அரியலூரில் நவீன வாசக்டமி இரு வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் நவீன வாசக்டமி இரு வார விழாவினை முன்னிட்டு என்எஸ்வி விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட கலெக்டர் த.ரத்னா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் தெரிவித்ததாவது, குடும்ப நல நிரந்தர கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் 28.11.2020 முதல் 04.12.2020 வரை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாமில், எளிய முறை, புதிய முறை, தையல் இல்லை, தழும்பு இல்லை, வலி இன்றி செய்யப்படுகிறது. ஒரு சில நிமிடங்களில் செய்யப்படும். இல்லற இன்பம் குறையாது. அறுவை சிகிச்சை இல்லை, 100 சதவீதம் பாதுகாப்பானது. பக்க விளைவுகள் இல்லை, மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை, கடின உழைப்புக்கு தடை இல்லை. மேலும், நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் நபருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,100-ம், ஊக்குவிப்போருக்கு ரூ.200-ம் அன்றே வழங்கப்படும் என கலெக்டர் த.ரத்னா தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, என்எஸ்வி விளக்க கையேடு மற்றும் கைப்பிரதி ஆகியவற்றை கலெக்டர் வெளியிட்டார். இவ்விழாவில், துணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் ராஜ்மோகன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, தேசிய நலக்குழுமம் ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு (பெரம்பலூர்), மணிகண்டன் (அரியலூர்), மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அசோகன், புள்ளியியல் உதவியாளர் (பொ) த.கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 75 = 83