அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டத்தில் விதிமீறல் இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டத்தில் விதிமீறல் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

கலை அறிவியல் பொறியியல் எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களையும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 16-ம் தேதி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள், பல்கலைகழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கொரோனா காரணமாக மாணவர் சமுதாயமே மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதலே அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் மன உளைச்சல், உளவியல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து பல்கலைக்கழகங்களுடன் ஆலோசித்து தான் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து செய்தது பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது இல்லை. அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து செய்யப்படுவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 − = 25