புதுக்கோட்டையில் 2,156 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மதர்தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் இரண்டாம் நாளான இன்று 20.11.2020 தேர்வு பெற்றவர்களுக்கு மொத்தம் 2,156 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.

இம்முகாம் மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இலுப்பூர் மதர்தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஐடிசி, டிவிஎஸ், சாம்சங் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1,120 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதே போன்று இன்றைய தினம் 1,036 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் மொத்தம் 2,156 நபர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகமானோர் கலந்து கொள்ளும் வகையில் இரண்டு நாட்கள் சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முகாம் சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த அரசுத்துறை அலுவலர்களுக்கும், அனைத்து தனியார் துறை நிறுவனங்களுக்கும், வேலை நாடுநர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதே போன்று தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கு தேர்வு செய்யப்பட்டோர் தங்களது நிறுவனங்களின் வளர்ச்சிக்காக சிறந்த முறையில் பணியாற்றி தங்கள் வாழ்வில் மென் மேலும் முன்னேற வேண்டும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன், மதர்தெரசா கல்விக்குழும தாளாளர் ஆர்.சி.உதயக்குமார், வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன், இராதாகிருஷ்ணன், அன்னவாசல் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ராமசாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − = 65