புதுக்கோட்டையில் 1,120 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மதர்தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். இம்முகாம் மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மத்திய மண்டல திருச்சி சரக காவல்துறை தலைவர் ஜெயராம், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் இம்முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாம் 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மதியம் 1 மணி வரை 4,000 நபர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடந்து வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 93 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. மேலும் இம்முகாமில் கலந்து கொண்டவர்களில் முதல் நாளான இன்று 1,120 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சாதனை புரிந்துள்ளார். இதன் பயனாக இந்த ஆண்டு 313 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 405 மருத்துவ இடங்களை முதற்கட்டமாக ஒதுக்கி கிராமப்புற மாணவ, மாணவியர்களின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் கலந்தாய்வு சுகாதாரத்துறையின் விதிமுறைகளின் படி முறையாக நடைபெற்று வருகிறது. மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவே பெறப்பட்டுள்ளது. ஒரே மாணவர் 2 மாநிலங்களில் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க உரிமையுள்ளது. ஆனால் தமிழகத்தின் விதிமுறைகளின் படி தமிழகத்தை இருப்பிடமாக கொண்டவர்கள் ஒரு மாநிலத்தில் மட்டுமே பெற முடியும். தேவையான குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாநிலங்களிலும் ‘கிளைம்” செய்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன், மதர்தெரசா கல்விக்குழும தாளாளர் ஆர்.சி.உதயக்குமார், வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன், இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 7 = 2