பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதாக பிடிஐ தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷமீர், லடாக் யூனியன் பிரதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான்- இந்தியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால், இதை மதிக்காமல் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தினமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இந்திய ராணுவ முகாம்களும், எல்லையில் மக்கள் வசிக்கும் குக்கிராமங்களும் குறிவைக்கப்படுகின்றன. இந்தாண்டில் மட்டும் இதுவரையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அத்துமீறல் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. இதில், இந்திய வீரர்களும், அப்பாவி மக்களும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு இந்திய ராணுவமும் அவ்வப்போது பதிலடி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் குருஸ் பிரிவு முதல் யுரி வரையிலான பல பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 13-ம் தேதி வெறிகொண்டு தாக்குதல் நடத்தியது. இதில், பொதுமக்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள். எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், 3 ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம்கள், பதுங்கு குழிகள், ஆயுதக்கிடங்குகள் போன்றவை அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் சரியாக குறிவைத்து தாக்கி அளித்துள்ளதாக பிடிஐ தகவல் தெரிவித்துள்ளது. பின் பாய்ண்ட் அட்டாக் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுப்படுகிறது. எல்லை வழியாக சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமான நிலையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் தரப்பில் ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், எந்த மாதிரியான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், ஏற்பட்ட சேதங்கள் என்ன? என்பது குறித்து இந்திய ராணுவம் சற்று நேரத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − = 17