தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது: முதல்வர் பழனிசாமி

தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நீர் மேலாண்மையில் சிறப்பான செயல்பாடுகளை செய்ததன் காரணமாக நடப்பாண்டில் அரசு கொள்முதல் நிலையங்களில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக 3,060 பேர் கூடுதலாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகிலுள்ள வனவாசியில் இருக்கும் அரசினர் பல தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்றார். ரூ.123 கோடியே 56லட்சம் மதிப்பிலான கட்டி முடிக்கப்பட்ட பணிகளை இன்று திறந்து வைத்தார். ரூ.118 கோடியே 93 லட்சம் மதிப்பிலான 44 புதிய திட்டபணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 6,832 பயனாளிகளுக்கு ரூ.46 கோடியே 32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். விழாவில் முதல்வர் பேசியதாவது: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 536 தொழிலாளர்கள் நேரடியாகவும், 2 ஆயிரம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டக்கூடிய தமிழ்நாடு மின்னணு நிறுவனம் இந்திய அளவில் 70 சதவீத உற்பத்தியை செய்து வருவதாகவும் முதல்வர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் அதிக அளவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் உயர் கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், உயர்ந்த நிலையில் நாட்டில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழும் எனவும் குறிப்பிட்டார்.

இந்திய வரலாற்றில் வேறு எந்த மாநிலத்திலும் ஒரே ஆண்டில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்த சரித்திரம் கிடையாது என்றும், இதன் மூலம் தமிழக அரசு சரித்திர சாதனை ஏற்படுத்தியுள்ளதாகவும் கடந்த 2011ம் ஆண்டு 1,945 பேர் மட்டுமே மருத்துவக் கல்வி பயின்று வந்த நிலையில் தற்போது 3,060 பேர் மருத்துவக் கல்வி பயிலும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என கூறினார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் தமிழக அரசு 313 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கி கொண்டிருப்பதாகவும், கடந்த ஆண்டு 6 பேர் மட்டுமே அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவக் கல்வியில் சேர முடிந்ததாகவும் தெரிவித்தார். நீர் மேலாண்மை துறையில் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை செய்ததன் மூலம் ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் பாதுகாக்கப்பட்டதாகவும் இதனால் டெல்டா மாவட்டங்களில் கால்வாய் ஏரிகள் தூர்வாரப்பட்டு நீர் சேமித்து அதன் மூலம் பயிர் சாகுபடி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட முதல்வர் நடப்பாண்டு 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து நீர் மேலாண்மையின் காரணமாக அரசு கொள்முதல் நிலையங்களில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட முதல்வர் டெல்லி மற்றும் கேரளாவை எதிர்க்கட்சிகள் பார்க்க சொல்லிய நிலையில் தற்போது அந்த மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதாகவும், தமிழகத்தில் கட்டுக்குள் இருப்பதாகவும் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தன்னைப்பற்றி நினைத்தால்தான் தூக்கம் வரும் என்று கூறிய முதல்வர் ஒரு வாரம் கூட தாங்காது என்று அவர் சொன்ன நிலையில் நான்கு ஆண்டுகளை கடந்து அதிமுக ஆட்சி நடைபெற்று வருவதாகவும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 8% ஜிடிபி தமிழகத்தில் உயர்ந்து பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக காலத்திலும் புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஒரு அறையில் இருந்து கொண்டு தமிழக அரசை பற்றி பொய்யான அவதூறு செய்திகளை அறிக்கையாக வெளியிடுவதன் மூலம் அறிக்கை நாயகன் என்ற பெயர் வேண்டுமானால் ஸ்டாலினுக்கு கிடைக்கலாம் என்றும் ஆட்சி கிடைக்காது என்றும் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் எதிர்க்கட்சியாக வருவதற்காக ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாநில உயர் கல்வி மற்றும் வேளாண்மை தறை அமைச்சர் கேபி.அன்பழகன், சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =