நாமக்கல் மாவட்டம், பரமத்தி சாலையில், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தில், அதிக பணப்புழக்கம் இருந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில், 5 க்கும் மேற்பட்ட போலீசார் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் 14 மணி நேரம் நடந்த சோதனையில், கணக்கில் வராத 5 லட்சத்து 25 ஆயிரத்து 740 ரூபாய் ரொக்க பணத்தை, நாமக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் ரமணியின் மேஜையிலிருந்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, நாமக்கல் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.