நேர்மையும், உண்மையும் உள்ள ஒரே தலைவர் கமல்ஹாசன் மட்டுமே புதுக்கோட்டையில் கட்சியின் பொதுசெயலாளர் முருகானந்தம் பேச்சு

புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகம் திறப்புவிழா, திறன் மேம்பாட்டு மையம் துவக்கவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் பிரிவு பொன்.கஜேந்திரன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில துணை செயலாளர் செந்தில்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் வைரவன், விவசாய பிரிவு கார்த்திக் மெஸ் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) வி.முருகானந்தம் கலந்துகொண்டு கட்சி அலுவலகத்தில் கொடியேற்றியும், கட்சி அலுவலகத்தை திறந்துவைத்தும், திறன் மேம்பாட்டு மையத்தை துவக்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்புரையாற்றினார்.

இதில், விவசாயிகள், இசைக்கலைஞர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், வாடகைக்கார் ஓட்டுனர்கள், வாடகை வேன் ஓட்டுனர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சலவைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், புதுக்கோட்டையின் மாற்றத்திற்கான விதைகளாக திகழ்ந்து வரும் மரம் நண்பர்கள் குழுவின் முன்னாள் பேராசிரியர் விஸ்வநாதன், மரம் அமைப்பின் மரம் ராஜா, ஐங்கரன் அருண்மொழி, திருமயம் ஆனந்தராஜ், நேசக்கரம் அறக்கட்டளை மகேஸ்வரி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அதன் பின்னர் முருகானந்தம் பேசுகையில், தற்போதைய கால சூழலில் நேர்மையும், உண்மையும் உள்ள ஒரே தலைவர் கமல்ஹாசன் மட்டுமே என்றும், தமிழகத்திற்கான ஏற்றம் தரும் மாற்றத்தை அவரே தருவார் என்றும் கூறினார். இந்திய நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தை காப்போம் என்றும் பேசினார். மக்கள் நலனை மட்டுமே அடிப்படை கொள்கையாக கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழக மக்களாகிய நீங்கள் ஆதரவு தரவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் ராஜகோபால் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் பிரிவு மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பாளர் ஜெய் பார்த்தீபன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர் மெஸ் சுந்தர், திருமயம் திருமேனி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + = 2