தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் விளைவாக புதிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தச் சிக்கலுக்கு தீர்வுகாணும் நோக்கில், ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’, ‘பென்குயின்’ , ‘சூரரை போற்று’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் ஓ.டி.டி. தொழில்நுட்பத்தில் ஆன்லைனில் ரிலீஸ் செய்யப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் 8ம் கட்ட ஊரடங்கானது அமலுக்கு வந்தது. அப்போது சின்னத்திரை நாடகங்களுக்கான படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்குமாறு திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதலைப் பொறுத்தே முடிவெடுக்கப்படுமென அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். அதாவது தமிழகத்தில் நாளையுடன் பொது ஊரடங்கு முடியும் நிலையில் திரையரங்கு திறப்பது பற்றி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை கடம்பூர் ராஜூ சந்தித்தார். அப்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பொறுத்து திரையரங்கு திறப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று அவர் கூறினார். மேலும் ஓ.டி.டி பிரச்சனையில் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறிய அமைச்சர், சுமூக உடன்பாடு எட்டுவதற்காக திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2