சமூக ஊடகங்களை பார்க்கவும் கேட்கவும் அருவருப்பாக உள்ளது:புதுகை வரலாறு வாசகர் ஆதங்கம்

தினம்தோறும் பரபரப்பான முக்கிய செய்திகளை நாங்கள்தான் முன்கூட்டியே தருகின்றோம் என்பதை காட்டி சக தோழர்களிடம் லைக் வாங்கிக் கொள்வதற்காக சமூக ஊடகங்களிலும் சில 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகளிலும் தவறான தகவல் நாள்தோறும் பரப்பப்பட்டு வருவது நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என கருத்து தெரிவித்து வாசகர் ஒருவர் தனது ஆதங்கத்தை நமக்கு (புதுகை வரலாறுக்கு) அனுப்பியுள்ளார் அவர் அனுப்பியுள்ள ஆதங்க செய்தி இதோ உங்கள் பார்வைக்கு:

நமக்குத் தெரிந்து ஜி.கே.மூப்பனார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவரது குடும்பத்தினர் அடிக்கடி மீடியாவுக்கு தகவல் தந்து பரபரப்பை ஏற்படுத்தவில்லை.தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாதிப்பு அதிகமாகி விட்ட இந்த சூழ்நிலையில் அதுபோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபலங்களின் குடும்பத்தினர் இரகசியம் கட்டிக்காக்க முடியாததுதான்.

ஆனால் கவலைக்கிடம், மிகவும் கவலைக்கிடம், மிக மிக மிக ஆபத்தான கட்டத்தில் என ஏதோ கிரிக்கெட் மேட்ச்சை வர்ணிக்கிற மாதிரி செய்துவிடுகிறார்கள்.. இதனால் மருத்துவமனை முன்பு கூட்டம் அதிகரித்து விடுகிறது. மீடியாக்களும் குவிந்து விடுகின்றன.. இதில் மருத்துவமனை மற்றும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் பங்கு பெரும்பங்கு.மீடியாக்களுக்கு விஐபிகள் வருவார்கள், அவர்களை பேட்டி எடுத்து போட்டாக வேண்டும் என்ற கட்டாயம். அதேபோல தகவல்களை யார் முந்திக் தருகிறோம் என்று போட்டா போட்டி.

இங்கு பிரபலம் குணமடைய வேண்டும் என்பதைவிட அறிவிப்பு எப்போது வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பே மேலோங்குகிறது… அதனுடைய அடுத்தகட்ட வேகமான பயணம்தான் மூச்சு இழுத்துக் கொண்டிருக்கும்போதே ஆழ்ந்த இரங்கல்.. ஆழ்ந்த இரங்கல் என உருகி உருகி நெஞ்சை நக்குவது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கலைஞரின் இறுதி நாள் அன்றும் இதே கூத்துதான். மனுஷன் உயிரோடு இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒரு பக்கம் அடித்தார்கள்.

இன்னொரு பக்கம் அவர் வீட்டு முன்பு செய்யப்பட்ட அவசர அவசரமான வேலைகள், அவர் பிழைப்பார் என்பதை விட இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று பரபரப்பையும் பதற்றத்தையும்தான் கூட்டியது. மொத்தத்தில் பாசிட்டிவான சிந்தனை வரவேயில்லை.எல்லோருமே இரங்கல் செய்தியை தயாரித்து வைத்துக்கொண்டு காத்திருக்கும் நிலைக்குக் கொண்டு போய்விட்டார்கள்.அதிர்ச்சி மரணத்தை அலங்கோல மரணம் ஆக்கும் போக்கு ஒழிந்து நாகரீகமான மரபு மீண்டும் தலை தூக்குமா என்பதே தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் இன்று செப்டம்பர் 25ம் தேதி 1.04 மணியளவில் காலமானதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் இறந்து விட்டதாக 24 மணி நேரத்துக்கு முன்பிலிருந்தே சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன இனிவரும் காலத்திலாவது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பது சாமானிய பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

80 − = 74