பிரதமரின் பேச்சுக்கு பிறகு தமிழக நாட்டு நாய்களுக்கு கிராக்கி

பொதுவாக நாட்டு நாய்களை யாரும் அதிகமாக கண்டுகொள்வதில்லை. ‘லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்ட், புல்டாக், பாக்சர்’ போன்ற வெளிநாட்டு ரக நாய்களை வளர்க்கவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

கடந்த ஆக., 30ம் தேதி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ராஜபாளையம் நாய் வகைகள் பற்றிப் பேசினார். அதில், ‘நமது பாதுகாப்பு படைகளில் தற்போது நாட்டு நாய் இனங்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். மக்களும் நாட்டு நாய்களை வளர்க்க வேண்டும். தமிழகத்தின் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை இன நாய்கள் சிறப்பானவை. அடுத்த முறை நீங்கள் ஒரு நாயை வீட்டில் வளர்க்க விரும்பினால் இந்த இனங்களை வளர்க்க முயற்சி செய்யுங்கள்’ எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் இவ்வாறு கூறியது தான் தாமதம், நாட்டு நாய்களுக்கு இப்போது மவுசு அதிகமாகிவிட்டது. பலரும் நாட்டு ரகத்தைச் சேர்ந்த நாய்களை வாங்க போட்டி போட துவங்கிவிட்டனர். இதனால் இவற்றின் விலையும் கிடுகிடுவென உயர துவங்கியுள்ளது. குறிப்பாக, ஆயிரம் ரூபாய்க்குள் விற்றுவந்த ராஜபாளையம் ரக நாய் தற்போது, ரூ.6,000 முதல் 25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

இதுகுறித்து கால்டை மருத்துவர்களும் நாய் பயிற்சியாளர்களும் தெரிவித்துள்ளதாவது:வெளிநாட்டு ரக நாய்களை விட நம் நாட்டு நாய்களுக்குத் தான் அதிக புத்தி இருக்கிறது. எளிதில் பயிற்சி அளிக்கவும் முடியும். மேலும் நாட்டு நாய்களுக்குத் தான், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. அதிக ஆயுளும் இதற்குத்தான் உண்டு. வெளிநாட்டு ரக நாய்களுக்கு தோல் நோய் உட்பட பல நோய்கள் எளிதில் வர வாய்ப்பு இருக்கிறது. காலநிலை மாறும் போதும் இந்த நாய்களுக்கு நோய் எளிதில் வரும். அவற்றுக்கான சிகிச்சை செலவும் அதிகம்.

இந்தியாவில் ராஜபாளையம், சிப்பிப்பாறை, ராம்பூர் பவுண்ட் உட்பட புகழ்பெற்ற பல நாட்டு நாய் ரகங்கள் உள்ளன. இதில் ராஜபாளையம் நாய்க்கு தான் மவுசு அதிகம். பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டதால் இதற்கு மேலும் மவுசு அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலத்தவர்களும் இதை வாங்க விரும்புகின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

70 + = 79