செந்தில் பாலாஜியுடன் கூட்டு சேர்ந்து மோசடி; ஓய்வு போக்குவரத்து அதிகாரிகளுக்கு ‘சம்மன்’

தி.மு.க. – எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியுடன் கூட்டு சேர்ந்து 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரிகளுக்கு போலீசார் ‘சம்மன்’ அனுப்பியுள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. – எம்.எல்.ஏ.வாக இருப்பவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2011 – 15 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.அப்போது போக்குவரத்து அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து சென்னையை சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்ட 81 பேருக்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித் தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு சென்னையில் எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த மோசடி தொடர்பாக செப்.11ல் சென்னை ஜெ.ஜெ. நகரில் வசிக்கும் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் கணேசன் வீடு உள்பட 10 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல மணி நேரம் சோதனை நடத்தினர்.


இந்நிலையில் செந்தில் பாலாஜியுடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது தொடர்பாக 18ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பர்ட் தினகரன் உட்பட 3 அதிகாரிகளுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஜன.31ல் கரூர் மாவட்டத்தில் உள்ள செந்தில்பாலாஜி அவரது சகோதரர் வீடு அலுவலகம் என 17 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 + = 49