ஒசூர் அருகே பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் ஒடஒட விரட்டி வெட்டி படுகொலை : உறவினர்கள் சாலைமறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே, குந்துமாரணப்பள்ளி கிராமத்தில், பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் கும்பல் ஒன்றால் ஒடஒட விரட்டி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஒசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாத் (35) இவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக பதவி வகித்து வந்தார். இவரது மனைவி கீதா, இவர்களுக்கு தனுஞ்செயா மற்றும் ருஷிகேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ரங்கநாத்திற்கும் குந்துமாரணப்பள்ளி கிராமத்தை அடுத்துள்ள போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரங்கநாத் இன்று இரவு இளைய மகனான தனுஞ்செயாவின் பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார்.அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அவரிடம் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவரை அங்கிருந்து ஒடஒட விரட்டி உருட்டு கட்டைகளாலும் பயங்கர ஆயுதங்களாலும் தாக்கி கொன்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலே இரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடலை கிராமமக்கள் ஒசூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த கெலமங்கலம் போலீஸார் குந்துமாரணப்பள்ளி கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.ஆத்திரமடைந்த ரங்கநாத்தின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அப்பகுதியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனைத்தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

66 − = 61