சென்னையில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம்: மின் வாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடைநீக்கம்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தது தொடர்பாக 2 ஊழியர்களை மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த அலிமா என்பவர் நேற்று நடந்து சென்ற போது சாலையில் பதித்த மின் கேபிளில் கசிவு ஏற்பட்டதால், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை பெரியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் அலிமா(35). இவரது கணவர் ஷேக் அப்துல். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக அலிமா தனது கணவர் மற்றும் மகனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். புளியந்தோப்பு நாராயண சுவாமி சாலையில் சாகிதா பேகம் என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த இவர், நேற்று காலை 9.30 மணி அளவில் நாராயணசாமி தெரு வழியாக நடந்து சென்றபோது, சாலையோரம் பதித்திருந்த மின் கேபிள் சேதமடைந்து காணப்பட்டது. இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்து தெருவில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அலிமா ஓரமாக சென்றார். அப்போது மின் கசிவால் அலிமா மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அலிமா மீட்கப்பட்டு முதலுதவி அளிக்கபட்டது. மேலும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் அங்கு வந்த மருத்துவர்கள் அலிமாவை பரிசோதித்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு உதவி கமிஷ்னர் பிரகாஷ், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசார் அலிமாவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிகாரிகளின் அலட்சியமே இதுபோன்ற உயிரிழப்புக்கு முக்கிய காரணம், 15 நாட்களாக இப்பகுதியில் மின் இணைப்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பல குழந்தைகள் மின்சாரம் தாக்கப்பட்டு, படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதுகுறித்து புளியந்தோப்பு மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்தால் அவர்கள் ‘இதற்கும் எங்களுக்கும் சம்மந்தமும் இல்லை, நீங்கள் மாநகராட்சி ஊழியரிடம் கூறுங்கள்’ என்கின்றனர். இந்நிலையில், இதுபோன்ற அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது இந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார் என புகார் தெரிவித்தனர். இதன் பின்னர், இதுதொடர்பாக புளியந்தோப்பு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அதாவது, அலட்சியமாக செயல்பட்ட உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் மற்றும் இளநிலை பொறியாளர் வெங்கடராமன் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து, இறப்பு சம்பவத்தையடுத்து, சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 200 வார்டுகளிலும் இதுபோன்று மின்சார கேபிள்கள் ஏதேனும்,பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து அதனை கண்காணிக்கும் பணியில் சுமார் 700 நபர்களை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 1 =