ஒரே பாலின திருமணத்திற்கு தடை: ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி

புதுடில்லி;’ஒரே பாலின ஜோடிகள், திருமணம் செய்துகொள்வது, நம் சட்ட அமைப்பிற்கு புறம்பானது; நம் சமூகத்திற்கு விரோதமானது. ஆகையால், அதற்கு அனுமதி வழங்க இயலாது’ என, உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டில்லி உயர் நீதிமன்றத்தில், ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கக்கோரி, அபிஜித் ஐயர் மித்ரா என்பவர், பொது நல மனு ஒன்றை, தாக்கல் செய்தார். அதில், ‘இந்தியாவில், ஹிந்து திருமண சட்டத்தின் கீழ், ஒரே பாலின திருமணங்களுக்கு, அங்கீகாரம் வழங்கவேண்டும். அதற்கு, பார்லிமென்டில் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:திருமணம் நம் பாரம்பரிய சடங்காகும். ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்துகொள்வது, சட்ட அமைப்பிற்கு புறம்பானது; நம் சமூகத்திற்கு விரோதமானது. ஹிந்து திருமண சட்டத்தின்படி, கணவன், மனைவி என, இருவரின் பங்கு இருக்கும்போது, இத்தகைய திருமணங்கள் நடந்தால், அவர்களின் பங்கு கேள்விக்குரியதாகிவிடும். எனவே, இதற்கு மத்திய அரசால், அனுமதி வழங்க இயலாது. இவ்வாறு, அவர் கூறினார்.


இதையடுத்து, மனுதாரரின் வழக்கறிஞரிடம், தலைமை நீதிபதி படேல் கூறியதாவது:உலகம் புதுப்புது மாற்றங்களை காண்கிறது. எனினும், இந்த மாற்றம், இந்தியாவிற்கு பொருந்தாது. இந்த திருமண முறையை கோரும் நபர்கள், நீதிமன்றத்தில் அவர்களாக வந்து முறையிடாதது ஏன்…எதற்கு பொதுநல மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது… ஒரே பாலின திருமணத்தை பதிவு செய்ய அனுமதி கிடைக்காததால் பாதிக்கப்பட்டோரின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை, உயர் நீதிமன்றம், அக்டோபர், 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − = 87