பேனர் கட்டும் ரசிகர் இறந்தால் சினிமாவை தடை செய்யலாமா? – சூர்யாவுக்கு காயத்ரி கேள்வி

சென்னை : நீட் தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவருக்கு நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் எழுப்பி கேள்வி வைரலாகி உள்ளது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று(செப்., 13) நாடு முழுவதும் நடந்து முடிந்தது. இந்த தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதை சுட்டிக்காட்டியும், ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நீட் எதிர்ப்பையும் சுட்டிக்காட்டி இருதினங்களாக சமூகவலைதளங்கள் உள்ளிட்டவைகளில் பெரும் விவாதம் நடக்கிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா நீட் தேர்வை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.

அதில், ‛நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ‛கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தேர்வுக்கு வாழ்த்து சொல்ல வேண்டி நாம் இப்போது ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கிறது என தெரிவித்தார்.

சூர்யாவின் இந்த அறிக்கையை அவரது ரசிகர்களும், நீட்டை எதிர்க்கும் அரசியல் கட்சியினரும் வைரலாக்கினர். அதேசமயம் நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டதாக சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் எழுதினார். இதனால் சமூகவலைதளங்களில் சூர்யாவிற்கு ஆதரவாக டிரண்ட் செய்து வந்தனர். அதேசமயம் நீட் தேர்வின் நன்மை பற்றியும் பலர் எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் டுவிட்டரில் சூர்யாவின் அறிக்கையை சுட்டிக்காட்டி, நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் முதல்நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் தங்களது சொந்த பணத்தில் நடிகர்களுக்காக பேனர் வைக்கிறார்கள். சமயத்தில் அப்படி வைக்கும்போது தவறி விழுந்து உயிர் இழக்கின்றனர். இதற்காக சினிமாவையே தடை செய்து விடலாமா. தயவு செய்து மாணவர்களை தைரியமாக தேர்வை எதிர்கொள்ள சொல்லி ஊக்கப்படுத்துங்கள். மருத்துவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நோயாளிகளை பரிசோதிக்கும் போது அதுவும் ஒரு வித பரீட்சை தான் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − 82 =