புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகத்தில் புதிதாக கட்டப்பட்ட மின்வாரிய அலுவலகத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியதாவது: தமிழக முதல்வர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு புதிய வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்றையதினம் வயலோகம் கிராமத்தில் புதிய பிரிவு மின் அலுவலகம் வாரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வயலோகம் அண்ணாபண்ணை பிரிவின் மூலம் சுமார் 9,000 வீட்டு பயனாளிகளும், 200 குடிநீர் மின் இணைப்புகளும், 900 விவசாய மின் இணைப்புகளும், 150 தெருவிளக்கு மின் இணைப்புகள் மூலம் மின் நுகர்வோர்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் அண்ணாபண்ணை துணை மின்நிலையத்தில் தற்பொழுது உள்ள 8 மெ.வாட் பவர் கொண்ட மின்மாற்றியுடன், மேலுமொரு 8 மெ.வாட் பவர் கொண்ட மின்மாற்றி புதிதாக நிறுவப்பட்டு, மேம்பாடு செய்யப்பட உள்ளது.
மேலும் கஜா புயல் பாதித்த 7 மாவட்டங்களில் முதன்முதலில் பொதுமக்களுக்கு மின்சாரம் கொடுத்தது புதுக்கோட்டை மாவட்டம் ஆகும். மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இரவு, பகலாக பாடுபட்டு பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கினார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வயலோகம் கிராமத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண பொருட்கள் தவறாமல் வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர் அசோக்குமார், அன்னவாசல் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ராமசாமி, உதவி செயற்பொறியாளர்கள் அக்கினிமுத்து, தனபால் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.