வீடற்றோருக்கு புதுக்கோட்டையில் கட்டப்பட்டு வந்த 500 வீடுகள் சமூக விரோதிகளால் சூறை எஞ்சிய வீடுகளை பாதுகாக்க பயனாளிகளிடம் ஒப்படைக்க புதுகை வரலாறு கோரிக்கை

புதுக்கோட்டை நகராட்சி, நரிமேட்டில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடற்றோருக்கு கட்டப்பட்டு வந்த 1,920 குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் முன்பு சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டுவிட்டது. எஞ்சிய வீடுகள் சமூக விரோதிகளால் சூறையாடப்படும் முன்பு சம்மந்தப்பட்ட பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது புதுகை வரலாறின் கோரிக்கை.

புதுக்கோட்டை நகராட்சி, நரிமேட்டில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வந்த 1,920 குடியிருப்பு கட்டுமான பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது என கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு முடிவுற்ற கட்டுமானப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தித்திக்கும் செய்தியை அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில் :

தமிழக முதல்வர் பொது மக்களின் முன்னேற்றத்திற்காக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை நகராட்சி நரிமேட்டில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 1,920 குடியிருப்புகள் ரூ.150.58 கோடி மதிப்பீட்டில் பூங்கா, விளையாட்டு திடல், கூட்டுக் குடிநீர், அங்காடி வசதிகள், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய தனிநகரமைப்பாக இக்குடியிருப்பின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு இந்த அடுக்குமாடி குடியிருப்பு கொண்டு வரப்பட உள்ளது.

மேலும் இக்குடியிருப்புகளுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 7 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ரூ.3.17 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்காக முள்ளூரில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியிலிருந்து நரிமேடு பகுதி வரை 6,300 மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இக்குடியிருப்புகளிலிருந்து பெறப்படும் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் புதுக்கோட்டை நகராட்சி மருப்பிணியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல ரூ.8.60 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்திடமிருந்து திட்டத் தொகை பெறப்பட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணிகள் விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பயனாக புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள வீடற்ற பொதுமக்களின் சொந்த வீடு கனவுத்திட்டம் விரைவில் நிறைவடைய உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர்களின் அறிவிப்பால் பணம் கட்டி காத்திருக்கும் 1,920 வீடுகளின் பயனாளிகளும் அவர் சார்ந்த குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஊரடங்கின் காரணமாக மக்கள் நடமாட்டமின்றி வீட்டிற்குள்ளே முடங்கி கிடப்பது சமூக விரோதிகளுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்து விட்டது.

பல்வேறு பிளாக்குகளாக 1,920 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலான நிலையில் சமூக விரோதிகளோ குடியிருப்பு வளாகத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மது அருந்துதல், சீட்டு விளையாடுதல், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அழைத்து சென்று அவர்களுடன் உறவாடுதல் உள்ளிட்ட சொல்லவே நாகூசும் பல்வேறு விதமான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது 90 சதவீதம் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்கு தெரியும். மேலும் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் ஜன்னல் கண்ணாடி கதவுகளை அனைத்து பிளாக்குகளிலும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

குடியிருப்பு வளாக்திற்காக அமைக்கப்பட்ட தார்சாலை முற்றிலும் தரமற்றதாக உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு வரும் முன்பு தார்சாலையை போட்ட ஒப்பந்தகாரரை வைத்தே மீண்டும் அவருடைய சொந்த செலவில் சாலை அமைக்க வேண்டும் என்பதை புதுகை வரலாறு வலியுறுத்துகின்றது. அதைபோல் கட்டிடத்திற்கு அடித்த பெயிண்ட் கட்டிடம் உள்ளேயும், வெளியேயும் பேர்ந்து கொட்டி வருகின்றது.

இந்த கட்டிடத்தை சுமார் 5 ஆண்டுகள் பயன்படுத்தியது போல் காட்சியளிப்பதால் தரமற்ற பொருளை கொண்டு பெயிண்டிங் அடித்த ஒப்பந்தகாரரை கொண்டு அவருடைய சொந்த செலவில் மீண்டும் தரமான பொருளை கொண்டு பெயிண்டிங் செய்திட மாவட்ட நிர்வாகமும், குடிசைமாற்று வாரியமும் நடவடிக்கை எடுப்பதுடன் தரமற்ற பொருட்களை பயன்படுத்த உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் புதுகை வரலாறு வலியுறுத்துகின்றது. வளாகத்தை சுற்றி பராமரிப்புமின்மையால் மேற்கண்ட படி சமூக விரோதிகள் அங்கு செல்லாத வகையில் சுற்றுசுவர் எழுப்புவதுடன் காவலாளிகளை பணியில் அமர்த்தி காவல்துறையினர் கட்டுப்பாட்டில் குடியிருப்பு வளாகத்தை கொண்டு வர வேண்டும்.

வீடற்றோருக்கு மக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பு மக்களிடம் நல்ல முறையில் ஒப்படைத்தால் தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்பர் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் சமூக விரோதிகளால் சூறையாடப்பட்ட ஜன்னல் மற்றும் கதவு, பைப்லைன் உள்ளிட்டவற்றை அரசு தன்னுடைய சொந்த செலவில் பராமரித்து பேரிடர் காலமான இக்காலத்தில் உடனடியாக வழங்கிடவும் நகரிலிருந்து சமத்துவபுரம், நரிமேடு குடியிருப்பு வளாகம் வரை உள்ள தார்சாலைகளை நல்ல முறையில் செப்பணிட்டு சாலையில் இருபுறமும் உள்ள தேவையற்ற முள் செடிகளை அப்புறப்படுத்திட வேண்டுமெனவும் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் புதுகை வரலாறு கேட்டுக் கொள்கின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை கொண்டு வந்து சேர்த்து முன்னோடி மாவட்டமாக உயர்த்தியிருக்கும் மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது போல் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டால் கட்டிடங்களும் பராமரிக்கப்படும் சமூக விரோத செயலுக்கும் இடமிருக்காது என்பது நிதர்சனம். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பணிகளை சம்மந்தப்பட்ட துறைகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் புதுகை வரலாறு கேட்டுக்கொள்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2