பயிர் விளைச்சலை அதிகப்படுத்த திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேளாண்மைத்துறை இயக்குனர் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில், உயிர் உரங்களை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்யுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணைஇயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளத்தைப் பாதுகாத்திடவும், இரசாயன உரங்களால் ஏற்படும் மண்வளப் பாதிப்பைத் தடுத்திடவும், விவசாயிகள் தொடர்ந்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களைப் பயன்படுத்தி மண் வளத்தை மேம்படுத்தி நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்யவேண்டும். எனவே திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்தி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

உயிர் உரங்களின் வகைகள்: நெற்பயிருக்கான அசோஸ்பைரில்லம், சிறுதானியங்கள், சூரியகாந்தி, எள், பருத்தி, கரும்பு, காய்கறி பயிர்கள், தென்னை, வாழை போன்ற நெல் அல்லாத இதர பயிர்களுக்கான அசோஸ்பைரில்லம், ரைசோபியம் (பயறு), ரைசோபியம் (கடலை), அனைத்து பயிர்களுக்குமான பாஸ்போ பாக்டீரியா ஆகியனவாகும்.

உயிர் உரங்கள் இடுவதால் ஏற்படும் நன்மைகள்: உயிர் உரங்கள் காற்றில் உள்ள நைட்ரஜன் வாயுவைத் தழைச்சத்தாக மாற்றிப் பயிர்களுக்கு அளிக்கின்றன. மண்ணில், பயிர் எடுத்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள மணிச்சத்தைப் பயிருக்கு எளிதில் கிடைக்கச் செய்கின்றன. பயிர்வளர்ச்சி ஊக்கியான இன்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், பயோட்டின் மற்றும் வைட்டமின் ‘பி” ஆகியவற்றை உயிர் உரங்களிலுள்ள நுண்ணுயிரிகள் உற்பத்தி செய்வதால் பயிர்கள் செழித்து வளரும். இரசாயன உரங்களில் 20 முதல் 25 சதவீதம் வரை தழைச்சத்து மற்றும் மணிச்சத்து சேமிக்கப்படுவதால் உரச்செலவு குறைகிறது. மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.

திரவ உயிர் உரம் பயன்படுத்தும் முறை: ஏக்கர் ஒன்றுக்கு 50 மி.லி. திரவ உயிர் உரத்தை ஒரு லிட்டர் ஆறிய அரிசிக் கஞ்சியுடன் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் கலந்து 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்திப் பின்னர் விதைக்கவும் அல்லது நாற்றுக்களை, ஏக்கர் ஒன்றுக்கு 100 மி.லி. திரவ உயிர் உரத்தை நீரில் கலந்து நாற்றுகளின் வேர் நனையுமாறு 30 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் நடவு செய்யவும். நேரடியாக ஏக்கர் ஒன்றுக்கு 200 மி.லி. திரவ உயிர் உரத்தை மட்கிய தொழு உரத்துடன் நன்கு கலந்து நடவுக்கு முன்னர் நடவு வயலில் இடலாம்.

பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை:- உயிர் உரங்களை இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து பயன்படுத்தக்கூடாது. உயிர் உரங்களைக் குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். விதைகளைப் பூஞ்சணக்கொல்லியுடன் விதை நேர்த்தி செய்த பின்புதான் கடைசியாக உயிர் உரங்கள் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் திரவ உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி, இரசாயன உரங்களின் அளவை குறைத்து அதிக மகசூல் பெற்று நிகர லாபத்தை அதிகரித்திடுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 3 =