தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: புதிய டிஎஸ்பி வெங்கடேஷன் உறுதி

ஸ்ரீவைகுண்டம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அனைத்து விதமான சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி வெங்கடேஷன் உறுதியுடன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி அலுவலக எல்லைக்குட்பட்டு ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், சேரகுளம், ஆழ்வார்திருநகரி, ஏரல், சாயர்புரம் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இதில் சாயர்புரம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில காலமாக ஆன்லைன் லாட்டரி விற்பனையும், ஆழ்வார்திருநகரி, ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் மணல் கொள்ளை மற்றும் கந்துவட்டி கொடுமைகளும் செய்துங்கநல்லூர் பகுதிகளில் சாதிய மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

மேலும், காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் பல்வேறு வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் சேர்க்கப்படாமல் விடுவிக்கப்படுகின்றனர் எனவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக இருந்த சுரேஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக அருப்புக்கோட்டையில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த வெங்கடேஷன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டார்.

இவர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் 3ஆண்டுகள் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அனுபவம் உண்டு என்பதால் இப்பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்தும், அதன் பின்னனி குறித்தும் நன்கு அறிந்தவர். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி அலுவலக எல்கைக்குட்பட்ட பகுதிகளிலும் குற்றசம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுத்திடுவார் என்ற நம்பிக்கை பொதுமக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி வெங்கடேஷன் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அனைத்து விதமான சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அனைத்து வியாபாரிகளும், பொதுமக்களும் கண்டிப்பாக கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு அறிவித்த தளர்வுடன் கூடிய ஊரடங்கிற்கிற்கான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களை பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான சம்பவங்களில் ஈடுபட்டாதவர்கள். அத்தகைய கட்டுப்பாடான மக்களில் ஒரு சிலரின் சாதி பாகுபாடுகளால் ஏற்படும் மோதல்களை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் கயிறு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவது கட்டாயம் தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டராக வெங்கடேசன் பணியாற்றிய போது 28 குண்டர் தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்ட ஒழுங்கை சீராக வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 3