பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராகவுள்ளது : தனியார் மருத்துவமனை

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய அறக்கட்டளை சார்பாக கொரோனாவால் பாதித்தவர் களுக்காக நிதி திரட்டி வருகிறார். ரூ.100க்கும் மேல் யார் வேண்டுமானாலும் நிதி தரலாம் என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பற்றிய தகவல் கடந்த 5ந்தேதி வெளியானது. தொற்று உறுதியானவுடன், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், சில அறிகுறிகள் தென்பட்டன. அதனையடுத்து மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், தனது உடல்நிலை சீராக உள்ளது என பதிவிட்டார். இதனால், திரையுலகினர் அதிர்ச்சியடைந்தனர்.

அவரை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவானது கண்காணித்து வருகிறது. அவருக்கு சீரான பிராணவாயு அளிக்கப்பட்டு வருகிறது என கடந்த 6ந்தேதி தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனை இயக்குனர் இன்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், லேசான அறிகுறிகளுடன் எங்களது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. அவரது ரத்தத்தில் உள்ள பிராணவாயு, உடலின் சீரான இயக்கத்திற்கு தேவையான அளவு உள்ளது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 − = 58