கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; பலி 19 ஆக உயர்வு

கோழிக்கோடு: துபாயிலிருந்து 191 பேருடன் வந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம், கோழிக்கோடில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. இதில் விமானி, குழந்தை உள்ளிட்ட 19 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால், வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை, வந்தே பாரத் திட்டத்தின் மூலம், இந்தியா அழைத்து வரும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில், துபாயில் சிக்கி தவித்த இந்தியர்கள் 191 பேர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் கேரள மாநிலம் கோழிக் கோடு வந்தது.

இந்த விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. ஓடுதளம் அருகே வந்த போது, 35 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானம் இரண்டாகவும் உடைந்தது. மேலும், இந்த விபத்தில் விமானி, குழந்தை உள்ளிட்ட 19 பேர் பலியாகி உள்ளதாக மலப்புரம் எஸ்.பி தெரிவித்துள்ளார். தீயணைப்புத்துறையினர், காயமடைந்த பயணிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கடும் மழை காரணமாக விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விமானத்தின் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டதாகவும், இதனால், ஓடுதளத்திலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் எவ்வளவு பேர் பலியானார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.

கோழிக்கோடு விமான விபத்து உதவி எண் அறிவிப்பு- 0495 – 2376901 .
துபாய் இந்திய தூதரகம் உதவி எண்கள்: 056 546 3903, 0543090572, 0543090572, 0543090575 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

98 − = 89