அரியலூரில் சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தினை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் திறந்து வைத்தார்

அரியலூர் மாவட்டம், குறுமஞ்சாவடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தினை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் த.ரத்னா ஆகியோர் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அரசு தலைமைக்கொறடா தெரிவித்ததாவது: தமிழக முதல்வரின் உத்தரவின்படி, கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் போர் கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த நபர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்நோய்க்கு முறையான தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அலோபதி மருத்துவ சிகிச்சையுடன் சித்த மருத்துவ முறையின் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் அடிப்படையில் நிலவேம்பு குடிநீர், கபசூர குடிநீர் சூரணம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கோவிட்-19 சித்த சிறப்பு சிகிச்சை மையங்களை அமைக்க தமிழக முதல்வர் ஆணையிட்டதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் இன்று குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் இம்மையம் திறந்து வைக்கப்பட்டது. இம்மையத்தில் 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு, தலா 1 சித்த மருத்துவர், அலோபதி மருத்துவர் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் என 10 நபர்கள் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.

இம்மையத்தில், நோய் அறிகுறிகள் அல்லது சந்தேகத்திற்கு ஆட்படும் பட்சத்தில் மருத்துவமனைக்கு செல்ல தயங்குபவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவார்கள். மேலும், இம்மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு உப்பு கலந்த வெண்ணீரில் தொண்டை சுத்தம் செய்தல், இஞ்சி டீ, 8 வடிவ நடைப்பயிற்சி மற்றும் சித்த யோகர் பயிற்சி, மூச்சுப்பயிற்சி, கபசூர குடிநீர், சிற்றுண்டி, உடல் தேற்றி மற்றும் நோய் தடுப்பு மருந்துகள், சித்த மருத்துவர்கள் மூலமாக விழிப்புணர்வுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் உள்ளிட்டவைகள் அளிக்கப்படவுள்ளன.

எனவே, தமிழக அரசின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை காத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பொ.சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், கோட்டாட்சியர் கண்மணி, இணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) இளவரசன், திருமால், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், வட்டாட்சியர் சந்திரசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர் சிவா (எ) பரமசிவம் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 54 = 57