முத்தலாக்: காங்., மீது பா.ஜ., புகார்

புதுடில்லி : ‘முத்தலாக் தடை சட்டத்தை, 1980ம் ஆண்டுகளிலேயே, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியலுக்காக, அதை செய்ய தவறி விட்டது’ என, காங்கிரஸ் மீது, மத்திய அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முஸ்லிம்களில், மூன்று முறை, ‘தலாக்’ கூறி, மனைவி யிடம் இருந்து, கணவர் விவாகரத்து பெறும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முத்தலாக் தடை சட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்தாண்டு நிறைவேற்றியது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் முதலாமாண்டு தினத்தையொட்டி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசியதாவது: கடந்த, 1980களில், ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போதே, பார்லிமென்டில் முத்தலாக் தடை சட்டத்தை, அப்போதைய காங்கிரஸ் அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும்.

ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, லோக்சபாவில், 400 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில், 150 உறுப்பினர்களும் இருந்தனர்.அப்போது, எளிதாக இந்த சட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், ஓட்டு வங்கி அரசியலுக்காக, காங்கிரஸ் அரசு, அந்த சட்டத்தை நிறைவேற்றவில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில், ”காங்கிரஸ் கட்சியினருக்கு, முஸ்லிம் பெண்களின் நலனை விட, ஓட்டு வங்கி அரசியல் தான் முக்கியமாக உள்ளது. ”அதனால் தான், பார்லிமென்டில் பெரும்பான்மை இருந்தபோதும், முத்தலாக் தடை சட்டத்தை, காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

74 − = 65