கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை விட்டு சென்ற உறவினர்கள் மனிதாபி மானத்துடன் சடலத்தை அடக்கம் செய்த அரியலூர் சுகாதார துறையினர்

அரியலூர் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தவரின் சடலத்தை, அவரது உறவினர்களே கண்டும் காணாமல் விட்டு சென்ற நிலையில், மேற்கண்ட சடலத்தை கொட்டும் மழையில், மனிதாபிமான உணர்வுடன் அடக்கம் செய்த, அரியலூர் சுகாதாரத்துறையினரின் செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

அரியலூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக, கடலூர் மாவட்டத்திலிருந்து வந்த முதியவர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி, அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 30-ம் தேதி மதியம் மேற்கண்ட முதியவர் இறந்தார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. 31-ம் தேதி மாலை, அரியலூருக்கு வந்த அவரது உறவினர்கள், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தான் அவர் இறந்தார் என்ற தகவலை கேள்விப்பட்ட பிறகு, எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து வெளியேறி விட்டனர். அவர்களுக்கு மொபைல் போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து அனாதை சடலமான அந்த கொரோனா நோயாளியின் உடலை அடக்கம் செய்யும் பணியில், அரியலூர் சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

அரியலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ஸ்மித் சைமன், அரியலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்து முஹம்மது, நகர்ப்புற சுகாதார மேற்பார்வையாளர் வகீல், அரியலூர் காவல்துறை உதவி ஆய்வாளர் நந்தகுமார் ஆகியோர் நோய் தொற்று நோயாளியின் சடலத்தை பாதுகாப்பு உடையுடன், அரியலூர் ரயில்வே கேட் அருகே, நகராட்சிக்கு சொந்தமாக உள்ள இடுகாட்டில், நேற்று கொட்டும் மழையில், அரசின் விதிமுறைகளை செயல்படுத்தி நல்லடக்கம் செய்தனர்.

மனிதநேயத்துடன் செயல்பட்ட மேற்கண்ட ஐந்து பேரையும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 + = 83