தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் 400 ஏக்கரில் அறுவடைக்குத் தயாரான குறுவை நெற்பயிர்கள் மூழ்கின

காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் 410-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழையால் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் வட்டத்துக்கு உட்பட்ட பழியஞ்சியநல்லூர், வடுமாங்குடி, புளியடி, சங்கராங்குடி, எஸ்.புதூர் உள்ளிட்ட கிராமங்களில் 110 ஏக்கரில் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இதேபோல திருக்காட்டுப்பள்ளி, விண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இதுகுறித்து பழியஞ்சியநல்லூரைச் சேர்ந்த விவசாயி அ.செல்வகுருநாதன் கூறியபோது, “பழியஞ்சியநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைப் பருவத்தில் ‘ஆடுதுறை- 43’ ரக நெல்லை சாகுபடி செய்துள்ளோம்.

ஏக்கருக்கு குறைந்தது ரூ.20 ஆயிரம் செலவு செய்து, நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு பாதிப்புக்கு ஏற்ப அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். மழை நீர் வடிந்து செல்ல வழியின்றி மேடாக உள்ள ‘அ’ பிரிவு வாய்க்காலை உடனடியாக சீரமைக்க வேண்டும்” என்றார்.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாகபரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் 24 ஆயிரத்து 336 ஏக்கரில் முன்பட்டகுறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் ஆங்காங்கே நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன.

மழையால், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும்கடைமடை பகுதிகளில் ஒருபோக சம்பா சாகுபடிக்காக புழுதிஉழவு செய்து நிலத்தை தயார்படுத்தும் பணி பாதிக்கப்பட்டுஉள்ளது.

நாகை மாவட்டம்

நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறுவை அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன. இதனால் மகசூல் பாதிக்கப்படும் என்று நாகை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1