தூத்துக்குடியில் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சொக்கலிங்கபுரம், மகாராஜாபுரம், பல்லாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சொக்கலிங்கபுரத்தில் விவசாய பொதுமக்களின் சார்பில் வேளாண் பொருட்களை இருப்பு வைப்பதற்கு நமக்கு நாமே திட்டத்தின்கீழ் வேளாண் பொருட்கள் சேமிப்பு கிட்டங்கு அமைத்து தர வேண்டும், கிட்டங்கில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, கம்பு உள்ளிட்ட விளைபொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைத்து வியாபாரம் செய்ய உதவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் வேளாண் பொருட்கள் சேமிப்பு கிட்டங்கு கட்டப்படும் இடத்தினை பார்வையிட்டார். விவசாய பெருமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து தத்தனேரி ஊராட்சி மகாராஜாபுரத்தில் குடிநீர் கிணறு சேதம் அடைந்துள்ளதை தூர்வாரி ஆழப்படுத்தி குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கிணறு பகுதியை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு, கிணற்றினை சீரமைக்கவும், ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் நெடுங்குளம் ஊராட்சி பல்லாகுளத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து பயன்படுத்தப்படாமல் உள்ளது என்றும், அதனை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என்றும், பல்லாகுளம் பகுதியில் உள்ள மேலக்கண்மாயினை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பல்லாகுளத்தில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டு, ஊரக வளர்ச்சி துறையின் மூலம் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் மேலக்கண்மாயினை ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கண்மாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தகுந்த திட்ட வரைவு தயார் செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, விளாத்திகுளம் வட்டாட்சியர் ராஜ்குமார், விளாத்திகுளம் ஒன்றியக்குழு தலைவர் இனியசக்தி ராமசந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஜாகீர்உசேன், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேலு, மாணிக்கவாசகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமி (நெடுங்குளம்), உமாசங்கர் (மகாராஜாபுரம்), முக்கிய பிரமுகர்கள் பால்ராஜ், என்.கே.பி.வரதராஜபெருமாள், செல்வபெருமாள் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 1 =