-தேனி மாவட்டம், கம்பம், கம்பம் மெட்டு மலைப்பாதையில் 9வது கி.மீ முதல் 12வது கி.மீ.வரை ரோடு பராமரிப்பு பணிகளை தமிழக நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக வனத்துறை மற்றும் போலீஸ் சோதனை சாவடி அருகில் பணிகள் செய்ய சென்ற போது கேரள போலீசார், வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக அதிகாரிகள் கேரள அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கேரளா இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அம்மாநில போலீஸார் தொடர்பு கொண்டு பேசினர். ரோடு பராமரிக்கும் பணிகளை வீடியோ எடுத்து அனுப்பினர். கேரளா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த தகவலை தொடர்ந்து கேரள போலீசார் அனுமதித்தனர். இதன் பின் தமிழக அதிகாரிகள் ரோடு பராமாரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.