தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கம் அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்

அரியலூரில் தமிழ்நாடு தனியார்துறை, வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார்துறை நிறுவனங்களையும், இணையம் வழியாக இணைத்து, வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பிரிவு மூலம், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம், Tamil Nadu private job portal தமிழக முதல்வரால் கடந்த 16ம் தேதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து, தங்களது கல்வித் தகுதி, முன்அனுபவம், ஆகியவற்றுக்கு ஏற்ப பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும், தனியார் துறை சார்ந்த அனைத்து, சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை, இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அந்த காலிப்பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணி நியமனம் வழங்குவதற்காக, இந்த இணையதளம் வழிவகை செய்கிறது.

வேலையை நாடுபவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி, இதற்கான சேவை முற்றிலும் இலவசமாக, தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து மாவட்ட, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள், சிறிய மற்றும் பெரிய அளவிலான, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போதைய சூழ்நிலையில் இதற்கு மாற்றாக, தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் மூலம், இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளை பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள வேலை நாடும் இளைஞர்களை, இணைய வழியாக தொடர்பு கொண்டு, தனியார் துறையில் வேலை அளிப்பவர்கள், பணி வாய்ப்புகளை அளிப்பதற்கான அரிய சேவை, உருவாக்கித் தரப்பட்டுள்ளது.

இந்த சேவையை, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுபவர்களும் மற்றும் வேலை அளிப்பவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 3 = 12