கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ளுவதற்கு அரசு நிதி உதவி வழங்குகிறது: கலெக்டர் தகவல்

கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ளுவதற்கு அரசு நிதி உதவி வழங்குவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில்: தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பணிக்காக தமிழக அரசு ரூ.1.00 கோடி அளவில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் அரசு தகுதியின் அடிப்படையில் நிதி உதவி வழங்கிட தயாராக உள்ளமையால் கிறித்துவ தேவாலயங்களிடமிருந்து அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே பின்வரும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு நிதி வழங்கப்படும்.

கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் பிற்சேர்க்கை- 2மற்றும்3ஐ பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறித்துவ தேவாலயங்கள் ஸ்தல ஆய்வு செய்யப்பட்டு, கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும் நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

எனவே திருப்பூர் மாவட்டத்திலுள்ள கிறித்துவ தேவாலயங்களை நடத்துவோர் இத்திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர். க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

78 − = 76