மறக்க முடியுமோ
மன்னர் மன்னரை!
………………………………..
பைந்தமிழ்ப் புரட்சி யாளர்!
பாவேந்தர்! அவர்தம் வீர
மைந்தர்!நம் மன்னர் மன்னன்
மறைவுற்ற செய்தி கேட்டு
நைந்தது நெஞ்சம்! அந்தோ!
நற்றமிழ் வளர்ச்சிக் கென்றே
தொய்ந்திடா துழைத்த செம்மல்
தொண்டினை மறக்கப் போமோ!
எங்கணும் கவிஞர் கூட்டம்
இரங்கற்பா பாட , சோகம்
பொங்கியே அலையெ ழுப்பிப்
புதுச்சேரிக் கடலும் பாட
மங்காத புகழின் மன்னர்
மன்னரை இழந்தோம்! அந்தோ!
அங்கவர் குடும்பத் திற்கே
ஆறுதல் சொல்லப் போமோ!
சுயமரி யாதை வேங்கை!
சுடர்பகுத் தறிவுக் கோமான்!
அயல்மொழி ஆதிக் கத்தை
அறுத்திடச் சுழன்ற கூர்வாள்!
இயல்பிலே கோபக் காரர்!
எனினும்என் போன்றோர் மீதில்
பெயல்எனப் பெய்த அன்பின்
பெருந்தகை மன்னர் மன்னர்!
பூவெல்லாம் தமிழ்ம ணக்கும்
புதுவையில், இரண்டாண் டின்முன்
பாவேந்தர் இல்லத் தில் நான்
பார்த்ததும், என் கை பற்றி,
“நீ வாழ்க! பாவேந் தர்போல்
நிறைபுகழ் பெறுக!” என்றே
கோவேந்தர் அவர்பொ ழிந்த
குளிர்வாழ்த்தும் பெரும்பே றன்றோ!
சிந்தையும், எழுத்தும், பேச்சும்
செயலும்செந் தமிழே யாகித்
தந்தையின் நெறியில் வாழ்ந்த
தமிழ்மகன்! எழிற்பா வேந்தர்
வந்துமுன் நின்றாற் போலும்
வடிவினர்! வாழ்நா ளெல்லாம்
சந்தனம் போலத் தேய்ந்து
தனித்தமிழ் வளர்த்த சான்றோர்!
கருத்தியல் களப்போ ராளி!
கலைஞரின் இனிய தோழர்!
சரித்திர மாக வாழ்வார்!
தமிழுக்குத் தொண்டு செய்வோர்
மரித்திடல் உண்டோ? மன்னர்
மன்னரை வணங்கி, நெஞ்சில்
இருத்துவோம்! தமிழைக் காப்போம்!
இனம்மீட்கச் சூளு ரைப்போம்!
கவிச்சுடர். கவிதைப்பித்தன்.