எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

கொரோனா ஊரடங்குக் காலத்திலும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்ற சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஊழல் செய்வதை முன்னுரிமை வேலையாகக் கொண்டு, ஜனநாயகத்திற்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்படும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில், விவசாயிகளின் நிலங்களைப் பறித்திடும் தீர்மானமான எண்ணத்துடன், கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்துவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்ற சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு எதிராக வங்கிக் கடன்களின் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த மிரட்டி, விவசாயி ராஜாமணியின் தற்கொலைக்குக் காரணமான வங்கி அதிகாரிகள் மற்றும் அதன் கடன் வசூல் முகவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து உடனடியாக அவர்களைக் கைது செய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

ரிசர்வ் வங்கியின் கால அவகாசம் அளிக்கும் உத்தரவினை மீறிக் கடன் தவணையை வசூலிக்கும் வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

28 − = 26